Total Pageviews

Saturday, December 1, 2012

"வாருங்கள், விவசாயம் செய்வோம்!"






"வாருங்கள், விவசாயம் செய்வோம்!" [ஆனந்தவிகடன் - தெரு விளக்கு] 

பாரதி தம்பி | படங்கள் : பா.காளிமுத்து
--------------------------------------------------------- 
"வேறு எதையும்விட, இன்றைக்கும் விவசாயம்தான் லாபகரமான தொழில். ஒரு நெல் விதைத்தால், ஆயிரம் நெல் விளையும். ஒரு எள் விதைத்தால், ஆயிரம் எள் விளையும். ஆனால், ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து, முக்கால் கிலோ பிளாஸ்டிக்தான் எடுக்க முடியும். ஒரு கிலோ இ
ரும்பை உருக்கினால், அரை கிலோ தான் கிடைக்கும். ஒன்றை ஆயிரம் ஆக்குவது லாபமா? ஒன்றைப் பாதி ஆக்குவது லாபமா?'' - அவர் கேட்பதில் இருக்கும் உண்மை சுரீர் என்று உறைக்கிறது. அவரை ஒரு மணி நேரம் பேச விட்டுக் கேட்டால், 'மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பிரலாமா?’ என்று நகரத்தில் வேலை பார்க்கும் எந்த விவசாயி வீட்டுப் பிள்ளையும் நினைப்பான். அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தின் மீது நம்பிக்கை விதை விதைக்கிறார் பாமயன். சுமார் 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்குறித்து மாநிலம் முழுவதும் பயிற்சி அளித்துவருவதில் முக்கியமானவர். வேளாண் விளைபொருட்களை லாபகரமாக விற்பது எப்படி என்பதை நடைமுறையில் செய்துகாட்டும் வேளாண் பொருளியல் நிபுணர்.

மதுரை திருமங்கலத்தில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில், சோலைப்பட்டி கரிசல் மண் தோட்டத்தில் பாமயனைச் சந்தித்து உரையாடியது ஓர் அற்புதமான அனுபவம்.

''நான் விவசாயி வீட்டுப் பிள்ளை. திருநெல்வேலி, தென்காசி அருகில் சுந்தரேசபுரம் என் சொந்த ஊர். அப்பாவின் மரணத்துக்குப் பின்பு, திருமங்கலத்துக்கு வந்துவிட்டோம். மனோதத்துவம், சமூகவியல், இதழியல் எல்லாம் படித்துவிட்டு, 'ஒப்புரவு’, 'நேயம்’ என்கிற சிறு பத்திரிகைகள் நடத்தி, கடைசியில் திண்டுக்கல்லில் இருந்து வெளிவந்த 'புதிய கல்வி’ சுற்றுச்சூழல் பத்திரிகையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அந்தக் காலகட்டத்தில் அறிமுகமான 'பூவுலகின் நண்பர்கள்’ நெடுஞ்செழியன்தான் என்னை சுற்றுச்சூழல் பக்கம் திருப்பிவிட்டார். கடலூர், தூத்துக்குடி, கூடங்குளம் எனச் சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போவோம்; பேசுவோம்; எழுதுவோம்.

ஒருகட்டத்தில் 'இப்படி எல்லாவற்றையும் விமர்சனம் செய்துகொண்டே இருந்தால் போதுமா? நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?’ என்று தோன்றியது. அப்படி நினைத்த 10 நண்பர்கள் ஒன்றுகூடினோம். அதில் பத்திரிகையாளர்கள், பொறியாளர்கள், இடதுசாரிகள் எல்லோரும் உண்டு. அப்போது, 'இன்றைய சுற்றுச்சூழல் பிரச்னையால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். ஆகவே, அவர்களிடம் வேலை செய்வோம்’ என்ற முடிவில் 'தமிழக விவசாயிகள் தொழில்நுட்பக் கழகம்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்தோம். இது 2000-ல் நடந்தது. நம்மாழ்வார் போன்ற அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாய நிபுணர்களை அழைத்து, கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி கொடுக்கத் துவங்கினோம்.

ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் முற்றாக ஒதுக்கி, பண்ணையில் கிடைப்பதை வைத்து தற்சார்புடன் வெற்றிகரமாக விவசாயம் செய்வதைப் பற்றிய எங்களின் பயிற்சி, விவசாயிகளிடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. எங்கள் குழுவில் இருந்த எல்லோருமே விவசாயம் செய்ததால், புத்தகத்தில் படித்ததை ஒப்பிக் காமல் அனுபவங்களைச் சொன்னோம். இப்படிக் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்துள்ளோம்.

நம் விவசாயிகள் களை, பூச்சிகள் இரண்டையும்தான் பெரிய பிரச்னைகளாகச் சொல்வார்கள். ஆனால், உண்மை அது அல்ல. பூச்சிகளைப் பொறுத்தவரை முட்டை, புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சி என்று நான்கு பருவம் உண்டு. பூச்சிமருந்து தெளிக்கும்போது முட்டைக்குள் இருப்பதும், கூட்டுக்குள் இருக்கும் கூட்டுப்புழுவும் பாதிக்கப்படுவது இல்லை. அப்புறம், பூச்சிமருந்து தெளித்து என்ன பலன்? இதையும் தாண்டி, எல்லா உயிரினங்களும் தலை முறைகள் தோறும் தன்னைத்தானே தகவமைத்துக்கொள்கின்றன. பூச்சிகளின் வாழ்நாள் இரண்டு வாரம், மூன்று வாரம்தான். ஒரு வருடத்தில் பூச்சி, பத்து தலைமுறைகளையே கடந்திருக்கும். பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஒவ்வொரு தலைமுறையிலும் அந்த மருந்தின் வீரியத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி பூச்சிக்கு அதிகரித்துக்கொண்டேபோகிறது.கடைசியில் பூச்சிக்கொல்லியின் வீரியத்தில் விவசாயி செத்துவிழுவார்... பூச்சி பறந்துபோகும். இதுதான் இங்கு நடக்கிறது. நாங்கள், சில இலை தழைகளைப் போட்டு பூச்சிகளை எளிமையாகக் கட்டுப்படுத்த வழி சொல்கிறோம்.

இதேபோலத்தான் வயல்களில் வளரும் களையும். நமக்கு உடம்பு முடியாமல் போனால் காய்ச்சல் வருவதுபோல, மண்ணில் சத்துக் குறைபாடு ஏற்படும்போது களை விளைகிறது. சுண்ணாம்புச் சத்து குறைந்தால், துத்திச் செடிகள் முளைக்கும். இதற்குத் தீர்வு, அந்தத் துத்திச் செடிகளை வெட்டி, திருப்பி அந்த மண்ணுக்கே கொடுக்க வேண்டும். எந்த களைச் செடி வயலில் முளைத்தாலும், அதை வெட்டி மறுபடியும் மண்ணுக்கே கொடுத்துவிட்டால் சத்துக் குறைபாடு சரிசெய்யப்படும். களையும் இல்லாமல் போகும். இதைச் சொன்னபோது, முதலில் விவசாயிகள் நம்பவில்லை. செயல்முறை விளக்கம் செய்துகாட்டிய பிறகே நம்பினார்கள்''- இப்படி பாமயன் விவரிக்கும் அனுபவத்தின் உண்மைகள் நம்பிக்கை ஊட்டுபவை.

இவர் பங்காற்றும் அமைப்பு, இயற்கை விவசாயம் குறித்த எளிமையான விளக்கங் கள் அடங்கிய சிறு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. 'தாளாண்மை’ என்ற சிறு இதழையும் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து நடத்திவருகிறது.

''நகர வாழ்க்கை பிடிக்காத பலர், 'எல்லாத்தையும் விட்டுட்டு ஊருக்கே போயிடணும்’ என்று பல சந்தர்ப்பங்களில் நினைக்கிறார்கள். 'விவசாயத்தில் அவ்வளவு வருமானம் வராதே’ என்ற எண்ணம் அதைத் தடுக்கிறது. ஆனால், நிச்சயம் விவசாயத்தில் வருமானம் பார்க்க முடியும். ஒரு பொறியியல் பட்டதாரி நகரத்தில் 35 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நான்கு ஏக்கர் நிலத்தில் அதைவிடச் சற்றே கூடுதலான பணத்தை விவசாயத்தில் எடுக்க முடியும். ஆனால், நிச்சயம் குறையாது. யாரோ ஒருவருக்காக இரவும் பகலும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து உடம்பைக் கெடுத்து உழைப்பதற்குப் பதிலாக, உங்களுக்காக, உங்கள் நிலத்தில், விருப்பப்பட்ட நேரத்தில் உழைப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும்? மன உளைச்சல் இல்லை; மருந்துச் செலவு இல்லை; நினைத்த நேரத்தில் இளநீர் வெட்டிக் குடிக்கலாம்; நாட்டுக்கோழி சாப்பிடலாம்... இந்த மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் ஒரு விலை வைத்தால் உங்கள் வருமானம் லட்சம் ரூபாயைத் தாண்டும். ஆனால், முதலீடு இல்லாமல் இது வராது. பொறியியல் படிக்க எத்தனை லட்சம் செலவு செய்கிறோம்? அதேபோல்தான் விவசாயத்துக்கும் முதலீடு வேண்டும். சொந்தமாக நிலம் இல்லை எனில், குத்தகைக்கு எடுத்துச் செய்யலாம். இதற்கான மாதிரிப் பண்ணைகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம்.

பொதுவாக, 'அரிசி விலை ஏறிப்போச்சு, காய்கறி விலை ஏறிப்போச்சு’ என்று எல்லோரும் சொல்கிறோம். ஆனால், உண்மை என்ன? சர்வோதயா இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜே.சி.குமரப்பா, 'இன்றுள்ள சூழலில் விவசாய விலை பொருட்களுக்கு உண்மையான விலை கொடுத்தால், நகரத்தில் இருக்கும் யாருக்கும் அதை வாங்கிக் கட்டுப்படி ஆகாது; அப்புறம் அவன் மானியம் இல்லாமல் வாழ முடியாது’ என்று சொன்னார். அதுதான் உண்மை. உதாரணத்துக்கு, நெல்லை எடுத்துக்கொள்வோம். 120 நாட்கள் ராப்பகலாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு, அதற்கான முதலீடு, கடனுக்கான வட்டி, பராமரிப்பு எல்லாவற்றையும் ஒரு தொழிற்சாலை முதலீடுபோலக் கணக்கிட்டால், ஒரு குவிண்டால் நெல்லின் மதிப்பு குறைந்தது 4,000 ரூபாய் வந்துவிடும். ஒரு கிலோ அரிசி 100 ரூபாயைத் தாண்டும். இந்தச் சுமையை ஒவ்வொரு விவசாயியும் தன் தோளில் சுமக்கிறான்.

ஒரு பொருள் எங்கு விளைகிறதோ, அங்கு நுகரப்படக் கூடாது. தஞ்சாவூர் நெல், அமெரிக்காவில் சாப்பிடப்பட வேண்டும். ஆஸ்திரேலிய ஆப்பிளை சேலத்துக்குக் கொண்டு வர வேண்டும் அதாவது, தற்சார்பு என்று ஒன்று இருக்கவே கூடாது. இதுதான் இன்றைய உலகமயத்தின் அடிப்படை. ஆனால், நாங்கள் இதற்கு எதிராக விவசாய உற்பத்தி, விளை பொருட்களைப்பயன் படுத்துவது எல்லாமே அந்தந்தப் பகுதிகளில் தற்சார்புடன் இருக்க வேண்டும் என்கிறோம். வள்ளுவன் சொன்னதுதான்...

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்!''

தரிசு நிலம் அரசுக்கு!

---0---

'எந்த ஒரு விவசாய விளைபொருளையும் மதிப்புக்கூட்டி விற்க வேண்டும்’ என்பது பாமயன் வலியுறுத்தும் முக்கியமான கருத்து. இதன் ஒரு மாதிரியாக, மதுரை அருகே பாப்பநாயக்கன்பட்டி என்னும் கிராமத்தில் 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து 40 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். அதில் இருந்து நூல் எடுத்து, கைத்தறியில் நெய்து, இயற்கை முறை சாயம் பயன் படுத்தி, சட்டைகள் தைத்து விற்கி றார்கள். தேங்காய் சிரட்டையில் சட்டையின் பட்டன். 'துகில்’ என்று பெயரிடப்பட்ட இந்தச் சட்டைகள், சந்தையில் விற்பனையாகும் காட்டன் சட்டைகளின் விலையைவிடக் குறைந்த விலையே. வரகு, குதிரை வாலி இவற்றை அரைத்து அரிசியாக விற்பது, இயற்கை விவசாய அரிசி, கடலை எண்ணெய், வெல்லம் எனப் பல பொருட்களை மதிப்புக் கூட்டி விற்கின்றனர். யார் கேட்டாலும் இதற்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்தையும் தருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான நிலம் தரிசாகக்கிடக்கிறது. ''இதைச் சரிசெய்ய எளிமையான வழி, 'இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தரிசாகக்கிடக்கும் நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும்’ என்று ஒரு சட்டம் போட்டால் போதும். விறுவிறுவென மரம் நடுவார்கள், விவசாயம் செய்வார்கள். பெரும் முதலீடு விவசாயத்தில் குவியும். செயற்கையான ரியல் எஸ்டேட் மாயையில் பணத்தைக் கொட்டுவதும் நிற்கும்'' என்கிறார் பாமயன்.

-

நன்றி ஆனந்தவிகடன்.

பாராட்டுகள் Barathi Thambi






No comments:

Post a Comment