Total Pageviews

Friday, March 23, 2012

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!


தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!

அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.

இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்தபடி பெற்று அதில் இந்த சோலார் பேனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப் படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.

தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?

பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.
மிக்க வந்தனங்களுடன்...




‎"ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும்" என்பது --- 'ஒரு நாளைக்கு 1000 வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும்'-- என்று இருக்கவேண்டும். மேலும் சுமார் 1700 – 1900 kWh/kW கிலோவட் ஹோவர்/கிலோவட், இதிலிருந்து பெறமுடியும்.http://www.newscientist.com/article/mg21328505.000-indias-panel-price-crash-could-spark-solar-revolution.html -- விலைகள் இங்கே சுமார் $1.2 to 1.6/Watt ---http://india.alibaba.com/country/products_india-solar-panel-price.html -- India

The Indian Renewable Energy Development Agency (IREDA) provides revolving fund to financing and leasing companies offering affordable credit for the purchase of PV systems in India.

State Utilities are mandated to buy green energy via a Power Purchase Agreement from Solar Farms

The Ministry of New and Renewable Energy has launched a new scheme (Jan 2008) for installation of Solar Power Plants. For the producer, a Generation-based subsidy is available up to Rs. 12/kWh (€ 0.21/kWh) from the Ministry of New and Renewable Energy, in addition to the price paid by the State Utility for 10 years.

The State Electricity Regulatory Commissions are setting up preferential tariffs for Solar Power

Rajasthan - Rs. 15.6 (€ 0.27) per kWh (proposed) West Bengal - Rs. 12.5 (€ 0.22) per kWh (proposed) Punjab - Rs. 8.93 (€ 0.15) per kWh[citation needed]

80% accelerated depreciation Concessional duties on import of raw materials Excise duty exemption on certain devices. Tamil Nadu goes with only state policy only! --http://en.wikipedia.org/wiki/Financial_incentives_for_photovoltaics#India -- What you see on a Canadian link -- http://www.cmhc-schl.gc.ca/en/co/maho/enefcosa/enefcosa_003.cfm
www.newscientist.com
Solar power has long had a reputation for being expensive, but the falling costs of making panels could change that

Sunday, March 18, 2012

தமிழகத்தில், வீடுகள் தோறும் சூரியமின் சக்தி உற்பத்தியை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது


கடுமையான மின்வெட்டில் தமிழகம் தத்தளிக்கிறது. உடனடியாக மின் உற்பத்தியை பெருக்க வேறு வழியும் இல்லை. எனவே, கடைசியாக அரசுக்கு புது திட்டம் ஒன்று உதித்துள்ளது. 

இத்திட்டப்படி, தமிழகத்தில், வீடுகள் தோறும் சூரியமின் சக்தி உற்பத்தியை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான, மரபுசாரா எரிசக்தி மின் கொள்கை தயாரிக்க பட்டுள்ளது. அதில், சூரியமின் சக்தியை கட்டாயமாக்குவதுடன் பல முன்னோடி திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது தற்போது வரைவு நிலையில், முதல்வரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் மழை நீர் சேகரிப்பு திட்டம், எல்லா கட்டடங்களுக்கும் கண்டிப்பாக அமல்படுத்தப்பட்டதை போல், இந்த திட்டத்தையும் கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மத்தியஅரசை நம்பி...: தமிழகத்தின் அனைத்து மின் உற்பத்தி முறைகளும், மத்திய அரசை நம்பியே உள்ளன. அனல்மின் உற்பத்திக்கு, மத்திய அரசு நிலக்கரி தர வேண்டும். அணுமின் நிலையம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீர்மின் நிலையம் அமைக்க, பல்வேறு மாநிலங்களோடு போராட வேண்டும். எரிவாயு மின் நிலையத்திற்கும், மத்திய அரசு தான் எரிவாயு ஒதுக்க வேண்டும்.

இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக, சூரியசக்தியை அதிக அளவில் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகத்தை மாற்ற, முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

தனி கொள்கை: இதன்படி, தமிழகத்திற்கு என, மரபுசாரா மின்சார கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. இதில், மரபுசாரா எரிசக்திகள், சிறு புனல் மின்நிலையங்கள் ஆகியவற்றை அதிகப்படுத்த, உரியயோசனைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழக எரிசக்தித் துறை செயலர் தலைமையிலான, மின்கொள்கை கமிட்டியில், மின்வாரிய தலைவர், எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவர், திட்டக்குழு உயரதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் துறை பொறியாளர்கள் இடம்
பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர், ஓய்வு பெற்ற பொறியாளர்கள் மற்றும் துறையில் சிறந்த வல்லுனர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, மின் கொள்கை தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை, முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் வெளியிட தயாராக உள்ளது.

திட்டம் என்ன: இதுகுறித்து கமிட்டியில் உள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது: மழைநீர் சேமிப்பு திட்டம் போல், இடவசதி கொண்ட அனைத்து வீடுகளிலும், சூரியசக்தி தட்டுகள் வைத்து, மின்சாரம் தயாரித்து, தங்கள் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். நட்சத்திர விடுதிகள், அரசின் சார்பிலான தங்கும் விடுதிகள், ஓய்வு இல்லங்கள் போன்றவற்றில், சூரிய சக்தி கட்டமைப்புகள் பொருத்தப்பட வேண்டும். தமிழக தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும், தங்களது கட்டடத்தின் மேல்தளம் அல்லது வளாகத்தில், சூரியசக்தி கட்டமைப்புகளை அமைக்க வேண்டும்.

இதற்கு, மத்திய அரசின் மானியத்துடன், தமிழகம் சார்பிலும் சலுகைகள் அளிக்கப்படும். சூரியசக்தி ஏற்றும் ரீசார்ஜ் பேட்டரி பொருத்தப்பட்ட விளக்குகள், அரசின் சார்பில், சலுகை விலையில் விற்பனை செய்தல் போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என, வரைவு அறிக்கையில் ஆலோசனைகள் கூறப்பட்டு உள்ளன.
காற்றும் கை கொடுக்கும்: தமிழகத்தில் கூடுதலாக, காற்றாலைகள் அமைக்கவும், கடலோரத்தில் காற்று எப்போதும் வீசும் பகுதிகளை தேர்ந்தெடுத்து, காற்றாலைகள் நிறுவவும் பரிந்துரைகள், மின்கொள்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை இறுதி வடிவம் பெற்று, முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும், என்றார்.

சூரியசக்தி கட்டமைப்புக்கு 50 சதவீத மானியம்: சூரிய சக்தி கட்டமைப்புகள் அமைக்கும் செலவு, வீடுகளின் மின் பயன்பாடுக்கு ஏற்ப மாறும். உதாரணமாக, 1,000 வாட், அதாவது, 1 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கட்டமைப்புகளை அமைக்க, 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதில்..

.* 15 வாட்ஸ் திறனில் நான்கு சி.எப்.எல்., பல்புகள்
* 750 வாட்ஸ் இஸ்திரி பெட்டி
* 150 வாட்ஸ் குளிர்பதனப் பெட்டி
* 75 வாட்ஸ் உயர்மட்ட மின் விசிறி அல்லது மேஜை மின் விசிறி
* 100 வாட்ஸ் "டிவி'
* 500 வாட்ஸ் மிக்சி
* 300 வாட்ஸ் கிரைண்டர் போன்ற பொருட்கள் பயன்படுத்தலாம். ஆனால், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், 2,000 வாட் அல்லது 2 கிலோ வாட் மின் கட்டமைப்புகள் தேவை. எனவே, மின் விசிறி, விளக்குகள் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு மட்டுமே, சூரிய சக்தி மின் இணைப்பு கொடுக்கப்படும். சூரிய சக்தி தடைபடும் போது, வழக்கமான
மின் இணைப்பில் மின்சாரம் எடுத்து கொள்ள வசதி செய்யப்படும்.

இதேபோல், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஓட்டல்கள், போலீஸ் குடியிருப்புகள், அலுவலகங்கள், பயிற்சி மற்றும் தங்கும் மையங்கள், சமுதாய நலக்கூடங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவற்றில், சாதாரண விளக்குகள் பயன்பாட்டிற்கும், விடுதிகளில், சமையல் தொடர்பான கருவிகளை இயக்கவும், சூரிய சக்தி கட்டமைப்புகள் அமைக்கப்படும். இந்த திட்டத்திற்கு, மத்திய அரசின் சார்பில், மொத்த செலவில், 50 சதவீதம் மானியமாக கிடைக்கும். மீதத் தொகையில், தமிழக அரசின் சார்பில் சில சலுகைகள் வழங்குவது குறித்து, ஆலோசனை நடக்கிறது. மேலும், தனியார் வங்கிகள் மற்றும் இந்திய மரபுசாரா எரிசக்தி ஏஜன்சி சார்பில், கடன் வழங்கவும் வசதி செய்யப்படும் என தெரிகிறது.

கூடுதல் தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: சூரிய சக்தியில் உங்கள் வீடும் ஒளிர, கூடுதல் தகவல்களுக்கு, சென்னையிலுள்ள தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையை, 044-2822 4830, 2822 2973, 2823 6592 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-Thanks Dinamalar


Generating Solar Electricity by fixing the Solar Panel on top of all big roads will be easy and helpful to Tamilnadu...  Will Tamil Nadu Govt will do that?  

Thursday, March 1, 2012

இளையராஜா - ராஜா ராஜாதான்

This is written by one of the Ilaiyaraja Associate...

ராஜா ராஜாதான்

ராஜா சார் என்று தமிழ் சினிமா உலகில் மிக மரியாதையோடு அழைக்கப்படும் இளையராஜாவின் ஒரு சில படங்களில் ஒரு உதவி இயக்குனராக எண்பதுகளில் நான் பணிபுரிந்த நாட்கள் மிக இனிமையானவை. அவரது இசைக் கோர்ப்பில் ஒரு பாடல் முழுமை பெறுவதை மிக அருகிலிருந்து அடிக்கடி பார்த்தும் கேட்டும் ரசித்தவன். 

பிரசாத் ஸ்டூடியோவில் காலை சரியாக ஆறரை மணிக்கெல்லாம் தினசரி ராஜா சாரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் உள்ளே நுழையும் தும்பைப் பூவாய் அதிலிருந்து இறங்கும் அவர் தன் பிரத்யேக அறைக்குள் போய் அமர்ந்து கொள்வார். அங்கே ப்ரேம் செய்யப்பட்ட, லேமினேட் செய்யப்ப்ட்ட அவருக்குப் பிடித்தமான சில ஆன்மீகப் பெரியவர்கள் படத்தின் அருகில் ஏற்றப்பட்டிருக்கும் ஊதுபத்தி வாசனையில் அந்த அறையே ஒரு ரம்மியமான சூழ்நிலையை உணர்த்தும். அன்றைக்கு ஒரு படத்தின் ரீ ரிக்கார்டிங்கா அல்லது பாடல் பதிவா, அது யார் படம் என்ற விபரங்களை அவரது மானேஜர் கல்யாணம் மிகப் பணிவோடு அவர் அருகே வந்து நின்றபடியே சொல்வார். பாடல் என்றால் அதை யார் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் கல்யாணம். பாலுவைக் கூப்புடு, சுசிலாம்மாக்கு சொல்லிடு என்று ஒன்றிரண்டு வார்த்தைகளே ராஜா சாரிடமிருந்து பதிலாக வரும்.

ஏற்கனவே வந்து அந்த அறையில் தயாராக இருக்கும் அவரது இசை உதவியாளர் சுந்தர்ராஜன் அண்ணன், அன்றைய பாடல் பதிவுக்குரிய ட்யூன் அடங்கிய கேஸட்டை ஒரு குட்டி டேப் ரிக்கார்டரில் போட்டுக் காட்டுவார். அது அனேகமாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ராஜா சாரால் கம்போஸிங் செய்த ட்யூனாக இருக்கும். அவரது குரலில் தத்தகாரத்தில் ஒலிக்கும் அதை ஒருமுறைதான் ராஜா சார் கேட்பார். (பாடல் கம்போஸிங் நாட்கள் பற்றி பிறகு விவரிக்கிறேன்.) பின்னர் வெளியே காத்திருக்கும் அந்தப் படத்தின் இயக்குனரை வரச் சொல்லி, அந்தப் பாடலுக்கான சூழ்நிலையை சுருக்கமாக மறுபடி ஒருமுறை கேட்டுக் கொள்வார்.

பின்னர் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே இருக்கும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வருவார். ஏற்கனவே அங்கே தயாராக இருக்கும் வாத்திய கலைஞர்கள் அதுவரை பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ராஜா சார் உள்ளே நுழைந்ததும் அந்த அறையே சட்டென நிசப்தமாகும். அன்றைய தினம் ரிக்கார்டிங் செய்யப்பட வேண்டிய பாடலுக்கான பி.ஜி.எம். நோட்ஸை அங்கே உட்கார்ந்துதான் ஒரு அரைமணி நேரம் மட்டுமே எழுதுவார் ராஜா சார். சம்பந்தப்பட்ட வாத்திய இசைக்காரர்கள் அதைப் பார்த்து தங்களுக்கான நோட்ஸை மட்டும் எழுதிக் கொள்வார்கள். கீ போர்டு, பேஸ் கிடார், எலக்ட்டிரிக் கிடார், வயலின், தபேலா, செல்லோ, சாக்ஸஃபோன், வீணை, டிரம்ஸ், புல்லாங்குழல் இப்படி அந்தப் பாடலுக்கு எது தேவையோ அவர்கள் மட்டும் வந்திருப்பார்கள்.

வயலின் கலைஞர்கள் மட்டுமே சுமார் ஐம்பது பேர் இருப்பார்கள். அந்த ஐம்பது பேரில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணும் இருப்பார். இப்போது காணக் கிடைக்காத லூனா என்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு சிறுமியை நிற்க வைத்து அழைத்து வருவதைப் போல அவர் தன் வயலின் பெட்டியுடன் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் நுழைவதை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். நோட்ஸை குறித்துக் கொள்வார், வாசிப்பார், ரிக்கார்டிங் முடிந்து முழுப்பாடலையும் கேட்டு ராஜா சார் ஓக்கே சொன்னதும் வயலினை அதன் பெட்டிக்கும் லாவகமாக வைத்துப் பூட்டினால் அடுத்த நிமிஷம் லூனா அதே சிறுமியோடு கிளம்பிப் போகும்.

வயலின் கலைஞர்களோடு சேர்த்து ஒரு பாடலுக்கு எண்பது பேர் வரை என்று அந்தச் சபை இசையால் நிரம்பி வழியும். நோட்ஸ் எடுத்துக் கொள்ள அரைமணி நேரம்தான் கொடுப்பார் ராஜா சார். ரிகர்சல் போலாமா என்று மைக்கில் கேட்பார். வாத்தியங்கள் வாரியாக ரிகர்சல் ஆரம்பிக்கும். முதலில் வயலின். ஐம்பது வயலின் எல்போக்களும் ஒரே மாதிரி உயர்ந்து தாழ்ந்து அன்றைய இசை மழையை ஆரம்பித்து வைக்கும். கண்ணாடி அறைக்குள் ரிக்கார்டிங் என்ஜினியர் அருகே அமர்ந்திருக்கும் ராஜா சார் அதைக் கவனமாகக் கேட்பார். சீட்டிலிருந்து எழுந்து ஒருத்தரை மட்டும் அடையாளம் காட்டி அவரை மட்டும் அந்த நோட்ஸை திரும்ப வாசிக்கச் சொல்லுவார். அவரது வாசிப்பில் எதோ ஒரு குறை இருப்பதை சுட்டிக்காட்டி நோட்ஸை சரியாகப் படித்து திருத்திக் கொள்ளச் சொல்வார். ஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்.

பின்னர் ரிதம் செக்‌ஷன் ரிகர்சல், தபேலா, ஃபேஸ் கிடார் என்று தனித்தனியாக வாசித்து ராஜா சாருக்கு திருப்தி என்றதும் அனைத்து கருவிகளுடனும் மொத்தமாக ஒரு ரிகர்சல் நடக்கும். அது முடிகிற போது நேரம் சரியாக காலை பத்து மணி ஆகியிருக்கும்.

டிபன் பிரேக்.

அரைமணி நேரத்தில் அனைவரும் திரும்பி வந்து ரிக்கார்டிங் போக தயாராக இருப்பார்கள். மறுபடி ஒரு ரிகர்சல். கீ போர்டு வாசிக்கும் ஜிஜி மானுவேலோ, புருசோத்தமனோ ராஜா சாரின் நோட்ஸ் பார்த்து கண்டக்ட் செய்ய அத்தனை வாத்தியங்களும் மூன்று நிமிஷ நேரம் உற்சாக பீறிட இசையை வெளிப்படுத்தி குதூகலிக்கும் காட்சி ஆகா. அடுத்த ஒன்றரை மணியில் மொத்த ரிகர்சலும் ஓக்கே. இனி ரிக்கார்டிங்தான். அது கூட டிராக் மூலம்தான் என்பதால் ஒவ்வொரு செக்‌ஷனாக வாசிக்க வாசிக்க பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார் என்ஜினியர். அருகிலிருந்து அதில் மாற்றமோ ஏற்றமோ சின்னச் சின்னதாய செய்து கொண்டிருப்பார் ராஜா சார். முழுசாக அந்தப் பாடல் எப்படி வரப்போகிறது என்பது அப்போதுவரை அருகிலிருந்து கேட்பவருக்கு அதுவரை தெரியாது.

அந்தப் பாடலுக்கு யார் பாட வேண்டும் என்று ஏற்கனவே ராஜா சாரால் சொல்லப்பட்டிருந்த பாடகரோ பாடகியோ உள்ள வந்து ராஜா சாருக்கு ஒரு வணக்கம் வைப்பார்கள். அப்போது மணி சரியாக பன்னிரெண்டு இருக்கும். பின்னர் வாய்ஸ் மிக்ஸிங். முதலில் டியூனுக்கான நோட்ஸ்களை பாடகர் எழுதிக் கொள்வார். அந்த இடைவெளியில் ஏறகனவே பாடலாசிரியரால் எழுதப்பட்டு வந்திருக்கும் பாடல் வரிகளை ராசா சாரிடம் கொடுப்பார் அந்தப் படத்தின் இயக்குனர். ட்யூனுக்கு வரிகள் ஒத்துப் போகிறதா என்பதை ஒருமுறை பாடிப்பார்த்துக் கொள்ளும் அவர் அதை பாடகரிடம் அனுப்பி வைக்க ட்யூனோடு அந்தப் பாடல் வரிகளையும் தங்கள் டைரியில் எழுதிக் கொள்வார் பாடகர். எஸ்.பி.பி. இதற்கென தனியாக ஒரு பெரிய டைரியே வைத்திருப்பார். அந்தப் பாடலின் வரிகளை தெலுங்கில் எழுதிக் கொள்ளும் அவர் அந்தப் படத்தின் கம்பெனி, டைட்டில், ரிக்கார்டிங் தேதி, அது தனக்கு எத்தனையாவது பாடல் என்பது உட்பட அனைத்தையும் அதில் குறித்துக் கொள்வார்.

இதெல்லாம் முடிகிற போது சுமார் ஒரு மணி ஆகியிருக்கும். பாடல் வரிகளை மட்டும் ஒருமுறை பாடச் சொல்லி கேட்கும் ராஜா சார் அதில் சில சங்கீத பாஷையில் சில அறிவுரைகளை வழங்குவார். ஒருமுறையோ இரண்டு முறையோதான் அதற்கான ரிகர்சல். உடனே டேக். ஏற்கனவே ரிக்கார்டிங் செய்யப்பட்ட பி.ஜி.எம் டிராக்கோடு பாடகரின் வாய்ஸையும் சேர்த்து ஒருமித்த ஒரு பாடலாக ஒலிக்கச் செய்வார் என்ஜினியர். அடடா அதுதான் அற்புத நிமிடங்கள்.... காலை ஏழு மணிக்கு கருத்தரித்த ராஜா சாரின் இசை அறிவு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ஒரு குழந்தையை பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் நேர்த்தியும் வேகமும் பிரம்மிக்க வைக்கும் அதிசயம். இப்படி எத்தனையோ ஹிட் பாடல்களை அவர் வடித்தெடுத்த வேளைகளில் உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....

நூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்......

ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்....