Total Pageviews

Sunday, March 18, 2012

தமிழகத்தில், வீடுகள் தோறும் சூரியமின் சக்தி உற்பத்தியை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது


கடுமையான மின்வெட்டில் தமிழகம் தத்தளிக்கிறது. உடனடியாக மின் உற்பத்தியை பெருக்க வேறு வழியும் இல்லை. எனவே, கடைசியாக அரசுக்கு புது திட்டம் ஒன்று உதித்துள்ளது. 

இத்திட்டப்படி, தமிழகத்தில், வீடுகள் தோறும் சூரியமின் சக்தி உற்பத்தியை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான, மரபுசாரா எரிசக்தி மின் கொள்கை தயாரிக்க பட்டுள்ளது. அதில், சூரியமின் சக்தியை கட்டாயமாக்குவதுடன் பல முன்னோடி திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது தற்போது வரைவு நிலையில், முதல்வரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் மழை நீர் சேகரிப்பு திட்டம், எல்லா கட்டடங்களுக்கும் கண்டிப்பாக அமல்படுத்தப்பட்டதை போல், இந்த திட்டத்தையும் கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மத்தியஅரசை நம்பி...: தமிழகத்தின் அனைத்து மின் உற்பத்தி முறைகளும், மத்திய அரசை நம்பியே உள்ளன. அனல்மின் உற்பத்திக்கு, மத்திய அரசு நிலக்கரி தர வேண்டும். அணுமின் நிலையம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீர்மின் நிலையம் அமைக்க, பல்வேறு மாநிலங்களோடு போராட வேண்டும். எரிவாயு மின் நிலையத்திற்கும், மத்திய அரசு தான் எரிவாயு ஒதுக்க வேண்டும்.

இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக, சூரியசக்தியை அதிக அளவில் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகத்தை மாற்ற, முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

தனி கொள்கை: இதன்படி, தமிழகத்திற்கு என, மரபுசாரா மின்சார கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. இதில், மரபுசாரா எரிசக்திகள், சிறு புனல் மின்நிலையங்கள் ஆகியவற்றை அதிகப்படுத்த, உரியயோசனைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழக எரிசக்தித் துறை செயலர் தலைமையிலான, மின்கொள்கை கமிட்டியில், மின்வாரிய தலைவர், எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவர், திட்டக்குழு உயரதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் துறை பொறியாளர்கள் இடம்
பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர், ஓய்வு பெற்ற பொறியாளர்கள் மற்றும் துறையில் சிறந்த வல்லுனர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, மின் கொள்கை தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை, முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் வெளியிட தயாராக உள்ளது.

திட்டம் என்ன: இதுகுறித்து கமிட்டியில் உள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது: மழைநீர் சேமிப்பு திட்டம் போல், இடவசதி கொண்ட அனைத்து வீடுகளிலும், சூரியசக்தி தட்டுகள் வைத்து, மின்சாரம் தயாரித்து, தங்கள் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். நட்சத்திர விடுதிகள், அரசின் சார்பிலான தங்கும் விடுதிகள், ஓய்வு இல்லங்கள் போன்றவற்றில், சூரிய சக்தி கட்டமைப்புகள் பொருத்தப்பட வேண்டும். தமிழக தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும், தங்களது கட்டடத்தின் மேல்தளம் அல்லது வளாகத்தில், சூரியசக்தி கட்டமைப்புகளை அமைக்க வேண்டும்.

இதற்கு, மத்திய அரசின் மானியத்துடன், தமிழகம் சார்பிலும் சலுகைகள் அளிக்கப்படும். சூரியசக்தி ஏற்றும் ரீசார்ஜ் பேட்டரி பொருத்தப்பட்ட விளக்குகள், அரசின் சார்பில், சலுகை விலையில் விற்பனை செய்தல் போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என, வரைவு அறிக்கையில் ஆலோசனைகள் கூறப்பட்டு உள்ளன.
காற்றும் கை கொடுக்கும்: தமிழகத்தில் கூடுதலாக, காற்றாலைகள் அமைக்கவும், கடலோரத்தில் காற்று எப்போதும் வீசும் பகுதிகளை தேர்ந்தெடுத்து, காற்றாலைகள் நிறுவவும் பரிந்துரைகள், மின்கொள்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை இறுதி வடிவம் பெற்று, முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும், என்றார்.

சூரியசக்தி கட்டமைப்புக்கு 50 சதவீத மானியம்: சூரிய சக்தி கட்டமைப்புகள் அமைக்கும் செலவு, வீடுகளின் மின் பயன்பாடுக்கு ஏற்ப மாறும். உதாரணமாக, 1,000 வாட், அதாவது, 1 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கட்டமைப்புகளை அமைக்க, 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதில்..

.* 15 வாட்ஸ் திறனில் நான்கு சி.எப்.எல்., பல்புகள்
* 750 வாட்ஸ் இஸ்திரி பெட்டி
* 150 வாட்ஸ் குளிர்பதனப் பெட்டி
* 75 வாட்ஸ் உயர்மட்ட மின் விசிறி அல்லது மேஜை மின் விசிறி
* 100 வாட்ஸ் "டிவி'
* 500 வாட்ஸ் மிக்சி
* 300 வாட்ஸ் கிரைண்டர் போன்ற பொருட்கள் பயன்படுத்தலாம். ஆனால், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், 2,000 வாட் அல்லது 2 கிலோ வாட் மின் கட்டமைப்புகள் தேவை. எனவே, மின் விசிறி, விளக்குகள் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு மட்டுமே, சூரிய சக்தி மின் இணைப்பு கொடுக்கப்படும். சூரிய சக்தி தடைபடும் போது, வழக்கமான
மின் இணைப்பில் மின்சாரம் எடுத்து கொள்ள வசதி செய்யப்படும்.

இதேபோல், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஓட்டல்கள், போலீஸ் குடியிருப்புகள், அலுவலகங்கள், பயிற்சி மற்றும் தங்கும் மையங்கள், சமுதாய நலக்கூடங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவற்றில், சாதாரண விளக்குகள் பயன்பாட்டிற்கும், விடுதிகளில், சமையல் தொடர்பான கருவிகளை இயக்கவும், சூரிய சக்தி கட்டமைப்புகள் அமைக்கப்படும். இந்த திட்டத்திற்கு, மத்திய அரசின் சார்பில், மொத்த செலவில், 50 சதவீதம் மானியமாக கிடைக்கும். மீதத் தொகையில், தமிழக அரசின் சார்பில் சில சலுகைகள் வழங்குவது குறித்து, ஆலோசனை நடக்கிறது. மேலும், தனியார் வங்கிகள் மற்றும் இந்திய மரபுசாரா எரிசக்தி ஏஜன்சி சார்பில், கடன் வழங்கவும் வசதி செய்யப்படும் என தெரிகிறது.

கூடுதல் தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: சூரிய சக்தியில் உங்கள் வீடும் ஒளிர, கூடுதல் தகவல்களுக்கு, சென்னையிலுள்ள தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையை, 044-2822 4830, 2822 2973, 2823 6592 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-Thanks Dinamalar


Generating Solar Electricity by fixing the Solar Panel on top of all big roads will be easy and helpful to Tamilnadu...  Will Tamil Nadu Govt will do that?  

1 comment:

  1. This is probably the best decision ever by J in Tn. This is far better than moving the library and converting it into a hospital

    ReplyDelete