திருவள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..!
நோயின்றி வாழ அனைவரும் விரும்புவர். எப்படித்தான் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் எவ்வாறேனும் நோய் வந்துவிடுகின்றது. நோய் வந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோய் தீரும். ஆனால் நோயே வராமல் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? அதிலும் நோயுற்றால் மருந்தில்லாமல் மருத்துவம் செய்ய இயலுமா? அவ்வாறு மருத்துவம் செய்தால் நோய் நீங்குமா? இவ்வாறு பல்வேறு வினாக்கள் நம் உள்ளத்தில் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் விடையளித்து மருந்தில்லா மருத்துவத்தையும் தமிழ் சித்தர் திருவள்ளுவர் எடுத்தியம்புகிறார்.
உணவே நோய்
பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக உணவு அமைகின்றது. உணவின் வாயிலாகவே நோய்க்கிருமிகள் பரவி உடலில் நோயை ஏற்படுத்துகின்றன. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருத்தல் வேண்டும். உணவு தூய்மையானதாக இருப்பினும் அவ்வுணவை அவரவர் உடற் தேவைக்கேற்ப உண்ணல் வேண்டும். உணவைச் சுவைக்காக உண்ணுதல் கூடாது. பசிக்கின்றதே என கிடைக்கின்ற தூய்மையற்ற உணவையும் உண்ணுதல் கூடாது. உடல் நலத்திற்கேற்ற உணவை உண்ணல் வேண்டும்.சுவையுடன் இருக்கின்றது என்பதற்காக உணவை அளவிற்கு அதிகமாக உண்ணுவதும் நோயைத் தரும். மேலும் சிலர் உணவு கிடைக்கின்றதே என்பதற்காக முன்பு உண்ட உணவு செரிமானம் ஆகிய பிறகு உண்ணாது உண்பர். இதனால் முன்னர் உண்ட உணவு விஷமாக (Food poison) மாறி உயிருக்குக் கேடுவிளைவிக்கும். அதனால் முன்பு உண்ட உணவு முழுமையும் செரிமானம் ஆகிய பின்னர் உணவினை உண்ணுதல் வேண்டும். நோய் வருமுன் காப்பதற்கு இதுவே சிறந்த வழி. இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தின் முதற்படிநிலையை,
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அற்றது போற்றி உணின்(942)
என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகின்றார்.
அளவாக உண்ணுதல்
எதற்கும் ஒரு அளவுண்டு என்று வழக்கத்தில் அனைவரும் கூறுவது இயல்பு. இது மற்றவற்றிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ நாம் உண்ணும் உணவிற்கு அளவு உண்டு. அவரவர் உடற்கூற்றிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப அறிந்து உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலில் நோய்ஏற்படும். உணவு அளவு குறைந்தால் சிலருக்கு குறைந்த அழுத்த நோய் ஏற்படும். இதனை '‘low pressure’ என்று கூறுவர். உணவு சரியாக உண்ணாமையால் வரக்கூடிய நோயே இக்குறைந்த ரத்த அழுத்த நோயாகும். உணவு சரியான நேரத்தில் உணாமலோ, குறைந்த அளவிலோ உண்டால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்து உடலில் படபடப்பு ஏற்பட்டு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கே ஊறுநேரக்கூடிய அளவிற்கு இது கொண்டு சென்று விடும். தேவைக்கு அதிகமாக உண்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனை ‘High pressure’ என்பர். சிலர் இறைச்சி உணவை அதிக அளவில் உண்டு தங்களின் உயிருக்கு இறுதியைத் தாங்களே தேடிக்கொள்வர்.
இறைச்சியில் உள்ள கொழுப்பு இரத்தத்தில் கலந்து அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்தக் குழாயில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படச் செய்கின்றது. தேவையான கொழுப்பு மட்டுமே உடல் எடுத்துக் கொள்கின்றது. மற்ற தேவையற்ற கொழுப்பு இரத்த்த்திலும், உடலில் ஆங்காங்கேயும் தங்கிவிடுகின்றது. அவ்வாறு தங்கிவிடும் கொழுப்பு இரத்தக் குழாயை அடைப்பதும் உண்டு. இதனால் இரத்தம் உடலில் அல்லது இதயத்திற்குப் போகின்ற தமனிகளில் உள்ள சிறிய வழியை அடைத்து இதயத் தாக்குதல் ஏற்படவும் வழி ஏற்படுகிறது. இதனை அறிந்தே வள்ளுவர் மருந்தில்லா மருத்துவத்தின் இரண்டாவது படிநிலையாக,
மிகினும் குறையினும் நோய் செய்யும்(941)
என்று குறிப்பிட்டு அவரவர் உடற்திறத்திற்கு ஏற்ப உண்டால் மருந்து தேவையில்லை என்று குறிப்பிடுகின்றார்.
நீண்ட நாள் வாழ
உலகில் தோன்றிய மக்கள் நீண்டநாள் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்காக பல்வேறு வகையான மருந்துகளை உட்கொள்கின்றனர். காயகல்பம் உண்கின்றனர். சிலர் தங்கபஸ்பம், பல்வேறுவகையான பஸ்பங்களையும் உண்ணுகின்றனர். எவ்வகையிலேனும் தங்களது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள அவரவர்க்குத் தகுந்தவாறு முயல்கின்றனர். இம்முயற்சியிலேயே சிலர் தங்களது குறிக்கோளை அடையமுடியாமல் இறந்தும் விடுகின்றனர். பல்வேறு காலங்களில் பல நாட்டினரும் தமது வாழ்நாளை நீடித்துக் கொள்ள முயன்றிருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு வகையான மருந்துகளைத் தேடி அலைவது வீணானான செயலாகும். வாழ் நாளை நீடித்துக் கொள்வதற்கு மருந்துகளோ பஸ்பங்களோ, காயகல்பங்களோ தேவையில்லை. அவ்வாறெனில் எங்ஙனம் வாழ்நாளை நீட்டித்துக் கொண்டு நோயின்றி வாழலாம்? என்ற வினாவும் நம்முள் பலருக்கு எழுகின்றது.
நலமுடன் நீண்ட நாள் வாழ மருந்தே வேண்டாம்.அதற்கு அளவுடன் உண்ண வேண்டும். அதுமட்டுமல்லாது தாம் முன்னர் உண்ட உணவு முழுமையாக செரிமானம் ஆகிய பின்னர் உண்டாலே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து முன்னர் உண்ட உணவு முழுமையாக செரித்த பின்னர் அளவுடன் உணவு உண்டாலே நீண்ட நாள் வாழலாம்.
இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தை,
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாற(943)
என்ற திருக்குறள் நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம் அளவில்லாது செரிக்காது தொடர்ந்து உணவை உண்டு கொண்டு இருப்பதனால்தான் உடலில் நோய் ஏற்படுகின்றது. அளவறிந்தும் நாம் உண்பதில்லை. இதனால் தேவையற்ற கொழுப்பு நமது உடலில் சேர்ந்து விடுகின்றது. அதிகப்படியான சதை உடலில் போட்டுவிடுகின்றது. தகுந்த உடற்பயிற்சியும் இல்லாத நிலையில் நாம் உண்ட உணவே நமக்கு நோயை உண்டாக்கும் விஷமாக மாறிவிடுகின்றது. எனவே நீண்ட நாள் நோயின்றி வாழ வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கடைபிடித்து வாழ்தல் வேண்டும்.
உணவு உண்ணும்முறை நம்மில் பலருக்கு எவ்வாறு உண்ண வேண்டும் என்பதும் எவ்வளவு, எவ்வப்போது உண்ண வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இத்தகைய உணவு உண்ணுகின்ற முறையினை நாம் நன்கு அறிந்து கொண்டோமானால் நம்மை நோய் என்பது அணுகாது. நன்கு பசித்த பின்னர் தான் நாம் உணவினை உண்ண வேண்டும். அதுவே சரியான உணவு உண்ணும் முறையாகும். “பசித்துப் புசி“ என்ற பழமொழியும் உணவு உண்ணும் முறையை நன்கு எடுத்துரைக்கின்றது. இவ்வாறு உண்ணுவதே ஒரு மருந்தில்லா மருத்துவ முறையாகும். இத்தகைய மருத்துவ முறையை,
அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்கத் துவரப் பசித்து (944)
என எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்.
உண்ட உணவு செறித்து(ஜீரணமானது) அறிந்து அப்பழக்கத்தை முறையாகக் கடைபிடித்து மாறுபாடில்லாமல், நன்றாகப் பசித்த பின்னர் உணவினை உண்க அதுவே மருந்தில்லா மருத்துவம் என்று இக்குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை தெளிவுறுத்தியிருக்கிறார். உணவு வகைகளை, உண்ணும் நேரத்தை மாற்றுதல் பசித்தவுடன் உண்ண வேண்டும். ஆனால் பலர் பசி எடுத்தாலும் அந்த நேரத்திற்கு உண்பதில்லை. அப்போது தேநீரோ அல்லது காபியோ அருந்திவிட்டு காலம் தாழ்த்தி உண்கின்றனர். இன்னும் சிலர் காலை உணவை பதினோரு மணி, பகல் உணவை மூன்று மணி இரவு உணவை பன்னிரெண்டு மணி என சரியான நேரத்திற்கு என்று இல்லாமல் மனம் போன போக்கில் உண்பர். இது வலியச் சென்று நோயை நாமே வரவழைத்துக் கொள்வது போன்றது. இவ்வாறு சரியான நேரத்திற்கு உண்ணாமல் இருப்பதும் நோயினை உடலில் உண்டாக்கும். இதனால் பலருக்கு தீராத வயிற்று வலி (ulcer) ஏற்படுகின்றது. பசி எடுத்தவுடன் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் குடல் புண்ணாகி விடுகின்றது. இவ்வாறு ஏற்படுகின்ற புண்ணால் சில சமயங்களில் குடலையே வெட்டி எடுக்கக்கூடிய சூழலும் ஏற்படுகின்றது.
அதனால் பசி ஏற்பட்ட சிறிது நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு நல்லது. சரி பசிஎடுத்து விட்டது கிடைக்கும் உணவினை உண்ணுவது நல்லதா? எனில் அவ்வாறு செய்யக் கூடாது. அவரவர் உடல்நிலைக்குத் தக்கவாறு ஏற்ற உணவை உண்ணுதல் நலம் பயக்கும். சிலருக்கு எண்ணெய் அதிகம் ஊற்றிச் செய்யப்பட்ட உணவோ, அல்லது அதிகமான காரம், உப்பு, புளிப்பு உள்ள உணவோ ஒத்துக் கொள்வது கிடையாது.
மேலும் சிலர் சைவ உணவைச் சாப்பிட்டுவிட்டு மாமிச உணவு கிடைக்கின்றது என்பதற்காக சைவத்திலிருந்து அசைவ உணவு முறைக்கு மாறுவர். இவ்வாறு உணவை மாற்றுவதும் நோய்க்கு இடங்கொடுக்கும் செயலாகும். அதனால் அவரவர் உடலுக்கு உகந்த உணவை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உண்டு வந்தால் நோயும் வராது. மருந்தும் வேண்டாம். இத்தகைய எளிய மருந்துவத்தை,
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (945)
என வள்ளுவர் நவில்கிறார்.
நமது தேசத் தந்தை மகாத்மாகாந்தி இங்கிலாந்து சென்று படித்தபோது தமது உணவு முறையை மாற்றிக் கொள்ளவே இல்லை. அங்கு அசைவ உணவே அதிகம் கிடைத்து. இருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எக்காரணத்தைக் கொண்டும் அவர் தமது உணவு உண்ணும் முறையை மாற்றிக் கொள்ளவில்லை. இதனை தமது சத்திய சோதனை நூலில் அவரே குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அதிகம் உண்ணுவது தமக்குப் பிடித்த உணவு இருந்தால் சிலர் அளவைவிட அதிகமாக உண்பர். இது மிகப்பெரிய உடல்நலக் கேட்டைத் தரும் செயலாகும். எப்போதும் உணவை மிதமாக உண்ணல் வேண்டும். அது உடல் நலத்தைப் பாதுகாக்கும் செயல் எனலாம். உண்ணும்போது சிறிது பசி இருக்கும் நிலையிலேயே நாம் உண்ணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு எப்போதும் துன்பத்தைத் தராது. அதிகம் உண்பவரை வழக்கில் ‘பெருந்தீனிக்காரன்‘ என்று குறிப்பிடுவர். இப்பெருந்தீனிக்காரனிடத்தில
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய் (946)
என வள்ளுவப்பெருந்தகை மொழிவது நோக்கத்தக்கது.
இன்னும் பலருக்குச் சில ஐயங்கள் எழலாம். நல்ல பசி. பசித்த பின்னர் தானே உண்ண வேண்டும். அதை எப்படி உண்டால் என்ன? என்று கருதுவாருமுளர். அது தவறான ஒன்றாகும். நமக்குப் பிடித்தமான உணவை உண்டாலும் பசி அடங்கும் வரை மட்டுமே உண்ண வேண்டும். அதுவே மகிழ்வைத் தரும். பசியடங்கிய பின்னரும் எழாது உணவை உண்டு கொண்டு இருத்தல் கூடாது. அவ்வாறு அதிக அளவில் உண்பதே பெருந்தீனி தின்பது என்று கூறுவர். பசி அடங்கியவுடன் உண்பதை நிறுத்தி விடுதல் நல்லது.உணவின் ருசிக்காக அதிக அளவு உணவை உண்டால் அதிகமான நோய்கள் நமது உடலில் தங்கி உடலை வருத்தும். எனவே அதிகம் உணவை உண்ணுவதைத் தவிர்த்தல் வேண்டும். இத்தகைய
அரிய மருத்துவ அறிவுரையை,
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றயிப் படும்(947)
என வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. இவை மருந்தில்லா மருத்துவத்தின் நோய்த் தடுப்பு முறைகளாகும். மருத்துவம் பார்க்கும் முறை இவ்வாறெல்லாம் இருந்தும் நோய் வந்துவிட்டால் என்செய்வது. நோய் வந்தவுடன் மருத்துவரை நாடிச் சென்று பார்த்தல் வேண்டும். அம்மருத்துவர் அது எத்தகைய நோய், அது எதனால் வந்தது? அதனை எந்த வழியில் தீர்க்கலாம் என அறிந்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இன்று சில மருத்துவர்கள் எந்தவிதமான நோய் அந்நோய் வந்த்தற்கான காரணம் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ளாமலேயே ஏதோ ஒரு சிகிச்சையைத் தொடங்கிவிடுகின்றனர். அது முடிவில் நோயாளியின் உயிருக்குக் கேட்டை விளைவித்துவிடுகின்றது. இக்கேடுகளையெல்லாம் தவிர்க்கவே திருவள்ளுவப் பேராசான்,
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)
என்ற மருத்துவம் பார்க்கும் முறையையும் எடுத்துக் கூறுகின்றார்.
நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தைக் கொடுப்பவர் என்ற நான்கும் மருத்துவமுறையில் முக்கியமானவையாகும். இவை ஒன்றைஒன்று சார்ந்திருக்கின்றது. இந்நான்கும் ஒன்றிணையும் போதுதான் நோயாளி நோயிலிருந்து முற்றிலும் குணமடைகின்றார். இத்தகைய மருத்துவ முறையினை, உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானெற்று அப்பால்நாற் கூற்றே மருந்து என வள்ளுவர் குறிப்பிடுகின்றார். நோயின் தன்மை, வந்த காரணம், அதனைப் போக்கும் பொருத்தமான மருத்துவமுறை இவற்றையெல்லாம் அறிந்து ஒரு மருத்துவர் செயல்பட வேண்டும். பணத்தின் பொருட்டு, அல்லது நோயாளிக்கு வந்திருப்பது இத்தகைய நோய் என்பது தெரியாமல் மருத்துவம் செய்தல் கூடாது என்ற மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ முறையினை வள்ளுவர் கூறியிருப்பது இன்றைய சமுதாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைகின்றது. மருந்து கொடுத்தல் நோய் பற்றி தெரிந்து கொண்டபின் அதற்குரிய மருந்தினை அளவுடன் கொடுத்தல் வேண்டும். அனைவருக்கும் நோயின் தன்மைக்கேற்பவும், நோயாளியின் வயது, நோயின் அறிகுறி ஏற்பட்ட காலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மருந்து கொடுப்பது நல்லது. இவற்றை மீறி மருந்தினை அளவிற்கு அதிகமாகக் கொடுத்தால் நோயாளிக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு நோயாளியின் உயிருக்கு ஊறு நேரும். இதனை மருத்துவர் நன்கறிதல் வேண்டும் என்பதை,
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல் (949)
என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவரின் கூற்று மிகச் சிறந்த மருந்தாளுரின் கூற்றைப் போலவும் அனுபவம் நிறைந்த மருத்துவரின் செயலை நினைவுறுத்துவதைப் போன்றும் அமைந்திருப்பது உன்னற்பாலது. மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் நோயாளியின் தன்மை, வயது, போன்றவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு மயக்க மருந்தை சரியான அளவில் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு கொடுக்காவிடில் நோயாளி நீள்துயிலில் ஆழ்ந்துவிட நேரிடும். இத்தகைய மருந்தளிக்கும் முறையை அனைத்துத் தரப்பு மருத்துவர்களும் நன்கு அறிந்திருப்பது மருத்துவத்துறையை மென்மேலும் சிறப்புடையதாக ஆக்கும். உடலை நலமுடன் வைத்திருக்க உதவும் வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கையாள்வது எளிதாகும். வள்ளுவர் வழி வாழ்க்கையை அமைத்து சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழ்வோம்.
SUGA = Success Unlimited Guaranteed Always...
For any job, all jobs:
SUGA Employment Services
(A division of SUGA Consulting Services),
Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004
Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room
(A division of SUGA Consulting Services),
Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004
Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room
For further details contact:
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,
CEO, SUGA Consulting Services
Email: ceo@sugaconsulting.in
nsugavanam@gmail.com www.sugaconsulting.in
www.suga-consulting-services.com
Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149
Send resume to: nsugavanam@gmail.com or sugaemployment@gmail.com
Contact N.Sugavanam. SUGA Employment Services, ( a Division of SUGA Consulting Services), Office No,26, TNHB Complex, 180, Luz Church Road, Mylapore, Chennai - 600004
Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191, 99623-11627, 91766-11627
http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021
http://suga-employment-services.blogspot.com/
No comments:
Post a Comment