Total Pageviews

Tuesday, May 29, 2012

இளையராஜா என்ற புதிய இசையமைப்பாளர் பாடல்களுக்குப் போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன...



இளையராஜா என்ற புதிய இசையமைப்பாளர் பாடல்களுக்குப் போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன....


இன்று (14.5.1976) – அன்னக்கிளி வெளியான நாள்..

’அன்னக்கிளி’யின் இசையமைப்பாளராக இசைஞானி தேர்வு செய்யப்பட்டபின், அவரைப் படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார் இசைஞானி.

இது பற்றி இசைஞானி கூறியது:-

“பஞ்சு சாரின் கதை-வசனத்தில் ஹிட் ஆகியிருந்த ‘உறவு சொல்ல ஒருவன்”, “மயங்குகிறாள் ஒரு மாது” என்ற 2 படங்களுக்கு விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார். அவரிடம் வேலை செய்த குருபாதம் என்ற இன்சார்ஜ், அவருக்கு வரவேண்டிய படத்தை நான் தட்டிப் பறித்து விட்டேன் என்ற தவறான எண்ணத்தோடு தயாரிப்பாளர் சுப்புவிடம் போனார்.

‘பஞ்சு சார், விஜயபாஸ்கர் கூட்டணி ஹிட் ஆகும் கூட்டணி சார். அவர் ஸ்டாரும், இவர் ஸ்டாரும் நன்றாக ஒத்துப்போயிருக்கு. அதை ஏன் மாத்துறீங்க?” என்றார். இதில் சுப்பு குழம்பிவிட்டார். கூடவே பஞ்சு சாரின் இன்னொரு தம்பி லட்சுமணன் வேறு. அவருக்கும் கேள்விக்குறிகள்.

“சார்! இந்த ராஜா, ஜி.கே.வி.கிட்டே கிட்டார் வாசிக்க்கிறாவர் சார். ஏற்கெனவே Unlucky Music Director என்று பெயர் எடுத்திருக்கிறார். அவர் மியூஸிக் பண்ணி பூஜை போட்ட படம் எல்லாம் நின்றுவிடும்” என்று பலவிதமாக சொல்லி பயத்தை ஏற்படுத்திவிட்டார். சுப்புவும் பயந்துவிட்டார்.

பஞ்சு சாரிடம் நேராக சென்ற சுப்புவும், லட்சுமணனும், ‘எதுக்கு நமக்கு ரிஸ்க்? விஸ்வநாதன் சார் பிரமாதமாக மியூஸிக் போடுகிறார். நம்ம படத்திற்கு ஒரு மெரிட் இருக்கும். டிஸ்ட்ரிப்யூட்டரும் படத்தை வாங்குறதுக்கு ஒரு பேரும் இருக்க வேண்டாமா?’ என்று சொன்னார்கள்.

‘அதைப் பற்றி ஒன்றும் பேசவேண்டாம், முடிந்து போன விஷயம். ராஜாதான் மியூஸிக்!” என்று பஞ்சு சார் ஒரேயடியாக அடித்துச் சொல்லிவிட்டார். இதைக்கேட்டு அவர்களது தம்பிகளும் பேசாமல் இருந்தார்கள். பூஜை தேதியும் குறிக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசனிடம் பாட்டெழுத கேட்ட நேரத்தில் அவர் சிங்கப்பூர் போவதாகச் சொல்லிவிட்டார். ‘எப்போது திரும்பி வருவார்?’ என்று கேட்டதற்கு, ‘படத்தின் பூஜை முடிந்த பிறகுதான் திரும்பிவருவார்’ என்று பதில் வந்தது. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதே நேரம் ‘பூஜையை நிறுத்த வேண்டாம். நானே பாட்டு எழுதிவிடுகிறேன்’ என்று பஞ்சு சார் கூறிவிட்டார். அதன்படி பாடலை எழுதித்தந்தார்.

ரிகர்சல் நாள் வந்தது. கவிஞர் வீட்டின் அருகில் இருக்கும் பாலாஜி கல்யாண மண்டபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லா ஆர்கெஸ்ட்ராவும் வந்தது. காலையில் ‘அன்னக்கிளி உன்னைத்தேடுதே’ பாடலுக்கு ரிகர்சல் செய்தோம். அவர்களுக்கெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. எனக்கும் உற்சாகமாக இருந்தது. இரண்டாவதாக, ‘மச்சானைப் பார்த்தீங்களா’ பாடலை ரிகர்சல் செய்தோம். மதிய உணவுக்குப் பின் மாலை 4 மணிக்கு பாடகி எஸ். ஜானகி வந்தார். பெரும்பாலும், பாடகர்கள் பெரிய இசையமைப்பாளருக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஆனால் ஜானகி, ஜி.கே.வி. ரெக்கார்டிங்கில் என்னிடம் பழகி இருக்கிறார். தவறாகப் பாடினால் ஜி.கே.வி. என்னைவிட்டு சரியாக சொல்லிக்கொடுக்கச் சொல்லும்போது, நான் பாடி சரிசெய்வதை தெரிந்தவர். ரிகர்சலுக்கு வந்து ஒத்துழைத்தார். பாடல் சொல்லிக்கொடுக்கும்போதே, அதனுடைய ஜீவனைப் புரிந்து கொண்டார். இது மிகவும் புதிது என்று தெரிந்து மிகவும் கவனத்தோடு கற்றுக்கொண்டார்.

சுப்புவுக்கும், லட்சுமணனனுக்கும், என் மீது இருந்த சந்தேகம் தீர்ந்துபோனது. ‘நீ நன்றாகப் பாடுவாய் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் அது இவ்வளவு புதுசாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று இரட்டிப்பு சந்தோஷத்தோடு பஞ்சுசார் சொன்னார். 

அடுத்த நாள் பூஜை. நானும், பாஸ்கர், அமர் ஆகியோரும் 6 மணிக்கு திருவேற்காடு போய்விட்டு, ஸ்டுடியோவுக்கு 7 மணிக்கு முன் வந்துவிட்டோம். பூஜை முடிந்தது, ரிகர்சல் தொடங்கியது. அர்க்கெஸ்ட்ராவெல்லாம் அமர்ந்து, ‘Ready .. One .. Two .. Three” என்று நான் சொன்ன அந்த நொடியில் ‘மின்சாரம் கட்’ ஆகி விளக்குகள் அணைந்துவிட்டன. எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது. டோலக் வாசிக்கும் பாபுராஜ், ‘ம்ம்.. நல்ல சகுனம்’ என்றார், கேலியாக.

மனம் உடைந்த நான், ஸ்டுடியோவில் பாடுபவர்களுக்கு இருக்கும் ரூமின் பின் கதவைத் திறந்து தனியாக உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் அப்படியே கழிந்தது. தம்பி அமரும், பாஸ்கரும் என்னைத் தேடிவந்து, ‘டைரக்டர் மாதவன் சார் வந்திருக்கார். உன்னைப் பார்க்க வேண்டுமாம்’ என்றனர்.

நான் உடனே எழுந்து போனேன். அவர் ‘கருமாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன். இந்தா பிரசாதம்’ என்று என் கையில் கொடுத்தார். பின்னர், ’நான்தான் உனக்கு சான்ஸ் கொடுக்கணும்னு நினைத்தேன். ஆனா பஞ்சு முந்திவிட்டார்’ என்றார். அது உடைந்த மனதுக்கு ஆறுதலாக இருந்தது. போன மின்சாரமும் வந்தது. தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமிக்குக் காட்டிவிட்டு வெளியே சிதறுகாய் எறிந்து உடைக்கப்பட்டது.

“Silence..! Take..! Running..!” என்ற குரல் ஒலிக்க கோவர்தன் மாஸ்டர், ‘One.. Two..” கொடுக்க, ஜானகி ‘ஆ…ஆ…’ என்று ஹம்மிங் தொடங்க, பாடல் நன்றாக வந்தது. எஞ்சினியர் சம்பத், ஒன்ஸ்மொர் என்று கேட்கப் போனார்.

“முதல் டேக் டேப்பைப் போட்டுக்காட்டினால், ஆர்கெஸ்ட்ராவின் தவறுகளை அவர்களே கேட்டுத் திருத்திக்கொள்வார்களே’ என்று நான் கூறினேன். எல்லாரையும் உள்ளே அழைத்தேன். சம்பத்தோ, ‘என்ன இது? இந்தப் பையன் இப்படிச் செய்கிறானே?’ என்று நினைத்தார். ‘ராஜா! இன்னும் ஒரு டேக் எடுத்திடலாமே’ என்றார். ‘எடுக்கலாம் சார்! ஆனா இதைப் போட்டுக்கேட்டா, அவங்க தவறி வாசிச்சதை அவங்களே திருத்தி வாசிப்பாங்க’ என்றேன்.

‘சரி’ என்று டேப்பை Rewind செய்தார். அதன் பின்னர் டேப்பை ஆன் செய்தார். டேப் ஓடியது. இப்போது வரும், இப்போது வரப்போகிறது என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, எதிர்பார்க்க, டேப் ஓடியதே தவிர, அதிலிருந்து ஒரு சப்தமும் வரவில்லை. காரணம் பாடல் பதிவாகவில்லை! ரெக்கார்ட் மூடில் மெஷினே ஓட்டவில்லை என்பது சம்பத்துக்குத் தெரிந்து போய்விட்டது. உடனே, ‘சார், சார்..! பாட்டு பதிவாகலை சார், One More take Sir..!” என்றார். சுப்பு சாரின் முகம் மாறியது. ஒரு மாதிரியாகி வெளியே எழுந்து போய்விட்டார். 

‘டேக் நம்பர் ஒன்று இரண்டு’ என்று நம்பர்களை ஏற்றிக்கொண்டே போனார்கள். 12 டேக் ஆனது. பஞ்சு சார் மட்டும் இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவிலும் அமைதியாக இருந்தார். 2வது பாடல் ‘மச்சானைப் பார்த்தீங்களா” பதிவாகியது. ‘சொந்தமில்லை பந்தமில்லை’ பாடலை சுசீலா பாட ரெக்கார்டு செய்தோம்.

‘அன்னக்கிளி உன்னைத்தேடுதே’ பாடல், சோகப்பாடலாக மறுபடியும் ஒருமுறை வந்தால் நன்றாக இருக்கும் என்று பஞ்சுசாரும், டைரக்டர் தேவராஜ் மோகனும் விரும்பினார்கள். அந்தப் பாடலை டி.எம்.சவுந்திரராஜன் நன்றாகப் பாடிக்கொடுத்தார். பாடல்கள் எல்லாம் பதிவாகி முடிந்தன. அதன்பின் படத்தின் சூட்டிங் நடந்தது”

சிவகுமாரும், சுஜாதாவும் நடித்த ‘அன்னக்கிளி’ 14-05-1976 அன்று வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கொடிகட்டிப் பறந்த காலம் அது. எனவே அன்னக்கிளிக்குப் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் பெரிய கூட்டம் இல்லை. சில ஊர்களில் ஒரே வாரத்தில் படத்தை எடுத்து விட்டார்கள். படத்தைப் பார்த்தவர்கள் வெளியே வந்து, ‘படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, இளையராஜா என்ற புதிய இசையமைப்பாளர் பாடல்களுக்குப் போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன’ என்று கூறியது, ரசிகர்களிடையே பரவியது. பத்திரிகைகளும் படத்தையும், இசையையும் பாராட்டி விமர்சனங்கள் எழுதின. இதனால் தியேட்டர்களில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகியது. ஒரே வாரத்தில் படத்தை எடுத்த தியேட்டர்களில், மீண்டும் ‘அன்னக்கிளி’ திரையிடப்பட்டது. 15 நாட்களில் ‘அன்னக்கிளி’ திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்ஃபுல் ஆனது. அன்னக்கிளி இசைத்தட்டு வெளிவந்து சக்கைபோடு போட்டது. ‘அன்னக்கிளி ஒன்னைத்தேடுது’, ‘மச்சானைப் பார்த்தீங்களா’, ‘ நம்ம வீட்டுக் கல்யாணம்’ முதலான பாடல்கள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன. அன்னக்கிளி 200 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.

No comments:

Post a Comment