Total Pageviews

Monday, December 10, 2012

மின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் ?



மின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் ?

-----------------------------------------------------------------
அதிசய அறிவியல் கண்டுபிடிப்பு 
---------------------------------------------

அறிவியல் என்பது நமக்குப் பல நற்பயன்களைக் கொடுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே சமயம் மனிதர்களின் நுகரும் வேகம் மற்றும் கணக்கிலடங்கா மோகத்தினால் பல ஊறுகளை ஏற்படுத்தியே வருகின்றோம். அவற்றில் நாம் சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகள் மின் ஆற்றல் தட்டு பாடு மற்றும் கரியமில வாயுக்களின் அதிகரித்தல். இவ்விரண்டையும் ஒரே கண்டுப்பிடிப்பு தீர்க்க முடியுமா என்ன ? முடியும் எனக் கூறுகின்றார் அறிவியல் ஆய்வாளர் பியரி கலேஜா (Pierre Calleja).

அவர் அல்கேக்கள் (ALGAES) என அறியப்படும் பாசிகள் மூலமாக ஒரு மின் விளக்கை உருவாக்கியுள்ளார். நமக்கே தெரியும் கார்பன் டை ஆக்சைட்கள் (CO2) என்பவை தொழிற்சாலைகளின் பெருக்கத்தினால் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் அதிகரித்து வருகின்றது. அத்தோடு CO2 -க்களை உறியக் கூடிய மரங்களையும் மனித இனம் தம் சுயநலத்துக்காக அழித்து வருகின்றது. இதனால் CO2-க்களின் அளவு சுற்றுச்சூழலில் மிகுந்து வருகின்றது. பசுமை வாயுக்களிலேயே முதன்மையானது கார்ப்பன் டைஆக்சைட்கள் ஆகும். இவற்றாலேயே நமது புவியில் வெப்பம் அதிகரித்து வருகின்றன.

ஆனால் CO2-க்களை உறிஞ்சும் அளவுக்குப் போதிய மரங்கள் புவியில் இல்லாமல் உள்ளது. இந்த நிலையிலேயே பிரஞ்சு அறிவியல் ஆய்வாளர் பியரி கலேஜா ஒரு விளக்கை உருவாக்கியுள்ளார்.

பியரி கலேஜா கடந்த இருபது ஆண்டுகளாக நுண்ணுயிர் வகையான மைக்ரோ ஆல்கேக்களைக் (MICROALGAES) குறித்து ஆராய்ந்து வந்தவர் ஆவார். சொல்லப் போனால் இந்த ஆல்கேக்கள் நமது புவியில் கிட்டத்தட்ட 300 கோடி ஆண்டுகளாக இருந்து வருவதைப் படிமங்கள் நிரூபிக்கின்றன. அது மட்டுமில்லாமல் இந்த ஆல்கேக்கள் தான் அதிகளவு ஆகிசிஜன்களையும் உற்பத்தி செய்யக் கூடியவையாக உள்ளது.

இதர தாவரங்களைப் போல இந்தப் பாசிகளும் கதிரவன் ஒளியினைப் பெற்று தாமே உணவை உற்பத்தி செய்யக் கூடியவை. அதனால் அதிகளவு CO2-க்களை உறிஞ்சவும் வல்லது.

இந்த மைக்ரோ ஆல்கேக்கள் எனப்படும் பாசிகளை வளர்ப்பதும் மிகவும் எளிது, இவற்றில் இருந்து உயிர்-எரியாற்றல்களை (BIOFUEL) பெறவும் முடியும்.

இவ்வாறு எண்ணற்ற பயன்களைத் தரவல்ல மைக்ரோ ஆல்கேக்களைக் கொண்டு பாசி விளக்கு ஒன்றினை உருவாக்கி உள்ளார் பியரி காலேஜா. இந்த மின் விளக்குகள் ஒளியை மட்டும் தராதாம், அத்தோடு கூடக் காற்றில் உள்ள CO2-க்களையும் உறிஞ்சிவிடுமாம்.

தண்ணீரில் வைக்கப்படும் ஆல்கேக்கள், காற்றில் இருக்கும் CO2-க்களை உறிஞ்சியும், சூரியனின் ஒளியைப் பெற்றும் ஒளிச்சேர்க்கை (PHOTOSYNTHESIS) மூலமாக மின் ஆற்றல்களை உற்பத்தி செய்யும். இந்த மின் ஆற்றல்களைப் பேட்டரிகளில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பிறகு இரவுகளில் அந்த ஆற்றலைக் கொண்டு இவ் விளக்கை ஒளியூட்டலாம். தேவைப்படும் போது மட்டும் அந்த மின் ஆற்றல்களைப் பயன்படுத்த ஏதுவாகவும் இவ் விளக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து வெளியேற்றப்படுவது என்ன தெரியுமா, வெறும் ஆகிசிஜன் (OXYGEN) மட்டுமே. இந்த ஒரே ஒரு பாசி விளக்கு மட்டும் ஓராண்டுக்கு ஒரு டன் CO2-க்களை உறிஞ்சக் கூடியது. அப்படி என்றால் பல லட்சம் பாசி விளக்குகள் பல ஆண்டுகள் பயன்படுத்தும் போது கோடிக் கணக்கான டன் CO2-க்களை உறிஞ்சிவிடும் அல்லவா.

இந்தப் பாசி விளக்குக்களை வெவ்வேறு வடிவங்களில், மக்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தாற் போல மாற்றவும் செய்யலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. ஆனால் நமது மக்களும், கொள்கை வகுப்பாளர்களும் இப்படியான கண்டுப்பிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்களா என்பது தான் கேள்வியே.

அறிவியல் என்பது இருமுனைக் கத்தி போல, அவற்றை நல்ல முறையில் கையாள்வதும், தீய முறையில் கையாள்வதும் அவரவர் கைகளில் தான் உள்ளது. அறிவியலைத் தூற்றுவோர் அறிந்து கொள்ள வேண்டியது, அறிவியல் ஒரு போதும் தீதல்ல, அறிவியலை கையாளும் மனித மனமே கோணலாக உள்ளது.

எழுதியது - இக்பால் செல்வன்
Source : http://www.kodangi.com/

No comments:

Post a Comment