Total Pageviews

Tuesday, July 17, 2012

'காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்'





ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் A Brief History of Time என்னும் பிரசித்தி பெற்ற நூலை எனக்குத் தெரிந்து இதுவரை மூன்று பேர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சிகாகோ உலகத் தமிழ் அறக்கட்டளையினர் அண்மையில் வெளியிட்டிருக்கும் 'காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்' நான்காவது என எண்ணுகிறேன். மொழிபெயர்த்தவர் நலங்கிள்ளி, பதிப்பாசிரியர் தியாகு.

இந்த நான்கையும் யாராவது ஒப்பிட்டுப் பார்க்கலாம். அறிவியலைத் தமிழில் எழுதுவதில் கொஞ்சம் மன்றாடியவன் என்கிற தகுதியில் இம்மாதிரியான நூல்களைத் தமிழில் தருவதில் உள்ள சிக்கல் களைக் கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒருபுறத்தில் 'தமிழில் எல்லாம் முடியும்... கலைச் சொற்கள் இல்லையெனில் கலைச் சொற்களை அவ்வப்போது ஆக்கிக்கொள்ளலாம்' என்று ஒரு கருத்து. மறுபுறத்தில் 'தமிழில் கலைச்சொற்கள் அமைக்கும் வரை காத்திருக்க வேண்டாம், அமைக்கவும் வேண்டாம்... சரளமாக ஆங்கிலத்தையும் தமிழையும் சரியான கலைச்சொற்கள் வரும் வரை கலந்தளிக்கலாம்'' என்னும் கருத்து. இந்த இரு துருவங்களுக்கும் இடையே ஒரு மொழிநடை வரவேண்டும். முதலில் இரண்டுக்கும் உதாரணம் தருகிறேன். சிகாகோவின் முயற்சி முதல் வகையைச் சார்ந்தது:-

'அண்டமானது மாவெடிப்பு இயன் வழிப்புள்ளியின் ஈறிலா அடர்த்தியுடன் தொடங்கிற்று. இயன்வழிப்புள்ளியில் பொதுச் சார்பியலும் மற்றெல்லா இயற்பியல் விதிகளும் செயலற்றுப் போகும். இயன்வழிப்புள்ளியிலிருந்து என்ன வரும் என்பதை ஊகிக்க முடியாது.'

இரண்டாவது வகை:-

'ஆர்டர் கமாண்டின் உதவியுடன் டேபிளின் அமைப்பில் மாற்றம் செய்யலாம். அதற்கு மூன்று வகையான கிளாஸ்கள் உள்ளன. புதிதாக ஒரு காலத்தைப் பதிவுசெய்யும்போது அது டேபிளின் கடைசி காலமாகத்தான் பதிவு செய்யப்படும். காலத்தின் இடத்தை நிர்ணயம் செய்ய முடியாது.'

இது 'தமிழ் இணையம்' பத்திரிகையில் வந்த கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. இவ்விரண் டில் முதல் உதாரண வாக்கியத்தை, ஒழுங்காக ஃபிசிக்ஸ் படித்த எனக்கே, புரிந்துகொள்ள அதன் தமிழை மறுபடி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டால்தான் முடிகிறது. ஆங்கிலமே தெரியாதவர்கள் தமிழில் மட்டும் படித்தால் இயன்வழிப்புள்ளி என்றாலும் singularity என்றாலும் இரண்டுமே புரியப் போவதில்லை. எனவே இந்த நூலின் முக்கிய குறிக்கோள் தமிழில் எழுதுவது சாத்தியம் என்பதை மட்டும் நிரூபிப்பது. அது படிப்பவர்களுக்குப் புரியும் என்பதை உத்தரவாதமாகச் சொல்ல முடியாது.

அதே போல் இரண்டாவது உதாரண வாக்கியம் கம்ப்யூட்டர் கற்பவர்கள் DDL என்னும் டேட்டா டெஃபனிஷன் லேங்வேஜைப் பற்றி அறிந்துகொள்ள ஓரளவுக்கு உதவும். ஆரம்பத்தில் இரண்டாம் வகைக் கட்டுரைகள் அதிகம் வரும். முதல் வகைக் கட்டுரைகளும் புத்தகங்களும் மெள்ளத்தான் வரும். தமிழிலேயே கலைச்சொற்களும் விளக் கங்களும் நிலைநாட்டப்பட்டு தமிழிலேயே படித்தாக வேண்டும் என்னும் கட்டாயம் ஏற்படும்போது, எல்லோரும் 'சிங்குலாரிட்டி'க்கு இயன்வழிப்புள்ளி என்கிற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, இம் மாதிரிப் புத்தகங்களுக்குத் தேவையும் பயனும் ஏற்படும். அதுவரை 'நேர்மங்களாலும் நொதுமங்களாலும் ஆன சின்னஞ்சிறு அணுக்கருவையும் அதைச் சுற்றிவரும் மின்மங்களையும் கொண்டமைந்த சாதாரணமான பருப்பொருளின் அடிப்படை அலகு' என்று அணுவைச் சொல்வதா அல்லது 'ப்ரோட்டான் களாலும் ந்யூட்ரான்களாலும் ஆன சின்னஞ்சிறு அணுக்கருவையும் அதைச் சுற்றிவரும் எலெக்ட்ரான் களாலும் கொண்டமைந்த (மேட்டர் என்னும்) பருப்பொருளின் அடிப்படைப் பிரிவு' என்று சொல்வதா என்கிற சர்ச்சை தொடரும். எப்படியும் சிகாகோவின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதே.

மாறாக, சில வாரங்களுக்கு முன் கிராம மாஜிஸ்திரேட் மேலிடத்துக்கு எழுதிய சென்ற நூற்றாண்டுக் கடிதத் தமிழின் உதாரணம் கொடுத்து இன்றைய நாட்களில் எப்படி எழுதுகிறார்கள் என்பதை யாராவது கிராமதிகாரி எழுதலாம் என்று சொன்னதற்கு பழநி மரிச்சிலம்பு கிராமத்தின் வி.ஏ.ஓ-வான என். சின்னச்சாமி இன்றைய ஜமாபந்தித் தமிழுக்கான உதாரணங்கள் கொடுத்து ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

'மாடாடுகள் மனுசாள் சௌக்கியம். நோய் நொடிகள் ஏதும் இல்லை. நஞ்சை பாழ், புஞ்சை புஜ்யம். நாட்டாமை மௌத்தி அடியேனும் தண்டனும் ஆஜர் சமூக சித்தம்.' இதை அவர் நகைச்சுவைக்காக கொடுத்திருந்தாலும் வட்டாட்சியருக்கு வி.ஏ.ஓ. எழுதும் கடிதங்களின் உதாரணங்கள் எளிய தெளிய தமிழில் இருந்தன. தமிழில் எல்லாம் முடியும் என்பது இங்குதான் தொடங்குகிறது.

No comments:

Post a Comment