Total Pageviews

Wednesday, June 6, 2012

வெள்ளி - சூரிய கிரகணம்- சூரியனின் முகத்தில் ஒரு கருப்புப் பொட்டு




சூரியனின் முகத்தில் ஒரு கருப்புப் பொட்டு

சூரிய கிரகணம் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஏதாவது ஓர் அமாவாசையன்று பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே சந்திரன் வந்து நிற்கும் போது சூரியன் முற்றிலுமாக அல்லது அரைகுறையாக் மறைக்கப்படுகிறது. இதையே சூரிய கிரகணம் என்கிறோம்.

பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே வெள்ளி கிரகமும் வந்து நிற்கலாம். வெள்ளி கிரகம் அப்படி குறுக்கே வந்து நின்றால் சூரியனின் ஒளித் தட்டு மறைக்கப்படுவதில்லை. மாறாக சூரியனின் ஒளித்தட்டில் சிறிய கருப்புப் பொட்டு தெரியும். அதுவே வெள்ளி கிரகம்.

நாளை (ஜூன் 6) காலையில் சூரியன் உதிக்கும்போதே இப்படியான கருப்புப் பொட்டுடன் காணப்படும். தொடர்ந்து சூரியனைக் கவனித்துக் கொண்டிருந்தால் இந்தக் கருப்புப் பொட்டு இடது புறத்திலிருந்து வலது புறமாக நகர்ந்து செல்வதும் தெரியும். சுமார் நாலரை மணி நேரம் இது நீடிக்கும். சென்னை நகரை வைத்துச் சொல்வதானால் இது காலை 10 மணி 19 நிமிஷம் வரை நீடிக்கும். அதன் பிறகு வெள்ளி கிரகம் சூரியனின் ஒளித் தட்டிலிருந்து அகன்று விடும்

வெறும் கண்ணால் சூரியனைக் காண முற்பட்டால் கண் பார்வை பாதிக்கப்படுகின்ற ஆபத்து உள்ளது. ஆகவே இதற்கென உள்ள கருப்புக் கண்ணாடியால் மட்டுமே பார்க்க வேண்டும்.

பூரண சூரிய கிரகணத்தன்று சந்திரன் முற்றிலுமாக சூரியனை மறைப்பதுபோல வெள்ளி கிரகம் ஏன் சூரியனை முற்றிலுமாக மறைப்பதில்லை என்று கேட்கலாம். சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி கிரகமோ பூமியிலிருந்து சுமார் 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகவேதான் அது சூரிய ஒளித்தட்டை முற்றிலுமாக மறைப்பதில்லை.

சொல்லப்போனால் சந்திரனைவிட வெள்ளி கிரகம் மிகப் பெரியது. அது கிட்டத்தட்ட பூமி அளவுக்குப் பெரியது. சந்திரனைவிட மிகத் தொலைவில் இருப்பதால் அது கரும் பொட்டு அளவுக்குத்தான் தெரிகிறது.

சூரிய ஒளித்தட்டில் வெள்ளி கிரகம் நகருவதை வைத்து சூரியன் மீது வெள்ளி கிரகம் ஒட்டிக்கொண்டு வழுக்கிச் செல்வதாகக் கருதி விடக்கூடாது. வெள்ளி கிரகம் சூரிய ஒளித்தட்டில் கருப்பாகத் தெரிகின்ற நேரத்தில் சூரியன் வெள்ளி கிரகத்தின் பின்னால் சுமார் 11 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும்.

புளூட்டோவையும் சேர்த்துக் கொண்டால் சூரியனை ஒன்பது கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சுற்றுப்பாதை உண்டு. சூரியனுக்கு மிக அருகில் உள்ளது புதன் கிரகம். அதாவது சூரியனைச் சுற்றி அமைந்த முதல் வட்டத்தில் புதன் கிரகம் உள்ளது. இரண்டாவது வட்டத்தில் வெள்ளி கிரகம் (இதற்கு சுக்கிரன் என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் வெள்ளி கிரகத்துக்கு வீனஸ் என்று பெயர்). மூன்றாவது வட்டத்தில் பூமி அமைந்துள்ளது. வேறு விதமாகச் சொன்னால் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே புதன், கிரகமும், வெள்ளி கிரகமும் அமைந்துள்ளன. புதன், வெள்ளி ஆகிய இரண்டும் பூமியைப் போலவே சூரியனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆனால், இந்த இரண்டின் சுற்றுப்பாதைகளும் சம தளத்தில் இல்லை. ஆகவே, இவை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே மிக அரிதாக எப்போதாவதுதான் நேர் குறுக்காக வந்து நிற்கும்.

உதாரணமாக, வெள்ளி கிரகம் 583 நாள்களுக்கு ஒருமுறை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே வந்து நிற்கிறது. ஆனால், அப்போது அது சூரியனுக்கு மேலே அல்லது கீழே அமைந்ததாகக் கடந்து சென்று விடுகிறது. 

சூரிய ஒளித்தட்டில் கருப்புப் பொட்டாகத் தெரிகின்ற அளவுக்கு நேர் குறுக்காக இருப்பதில்லை. எனினும், 105 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. 

அப்போதுதான் வெள்ளி நேர் குறுக்காக வந்து நின்று சூரிய ஒளித்தட்டில் கரும் பொட்டாகத் தெரிகின்றது. இந்த நிகழ்வை வெள்ளிக் கடப்பு என்று வானவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இப்போதைப்போல வெள்ளிக் கடப்பு நிகழ்ந்தது. அதற்கு எட்டு ஆண்டுகள் கழித்து இப்போது அது மறுபடி நிகழ்கிறது.

இதன் பிறகு 2117 ஆம் ஆண்டிலும் 2125 ஆம் ஆண்டிலும் இது நிகழும். தமிழகத்தில் உள்ளவர்கள் இப்போதைய வெள்ளி கடப்பு நிகழ்வைக் காணத் தவறினால் 243 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், அடுத்த தடவை நிகழும் வெள்ளிக் கடப்பு தமிழகத்தில் தெரியாது. 2255 ஆம் ஆண்டில் நிகழும் வெள்ளிக் கடப்புதான் தமிழகத்தில் தெரியும்.

வெள்ளி கிரகத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. வானில் பளீரென்று ஜொலிப்பதில் வெள்ளி கிரகம் முதலிடம் வகிக்கிறது. சில சமயங்களில் இது சூரிய உதயத்துக்கு முன் கிழக்கு வானில் ஜொலிக்கும். வேறு சமயங்களில் சூரியன் அஸ்தமித்த பின்னர் மேற்கு வானில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் தோற்றம் அளிக்கும். ஆகவே வெள்ளி கிரகத்துக்கு அது தெரிகின்ற நேரத்தைப் பொருத்து விடி வெள்ளி, அந்தி வெள்ளி என்ற பெயர் உண்டு.

கடந்த பல மாதங்களாக வெள்ளி கிரகம் மேற்கு வானில் தெரிந்து வந்தது. வெள்ளிக் கடப்பு நிகழ்வு கழிந்து ஜூன் மாத மூன்றாவது வாரத்திலிருந்து வெள்ளி கிரகம் கிழக்கு வானில் விடிவெள்ளியாகத் தெரிய ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment