Total Pageviews

Monday, June 4, 2012

தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!




வந்தனம் எங்கள் வசீகரனே!

நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!

சுஜாதாவை பத்தி ‘கேப்ஸ்யூல்’ வார்த்தைல சொல்றதுன்னா..ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.

இந்த எழுத்துலகப் பிதாமகனை நான் சந்திச்ச சம்பவம் ஒவ்வொண்ணையும் சதா நினைச்சுப்பாத்து எனர்ஜி ஏத்திக்கறேன் ஜி! ‘ஆனந்த விகடன்’ல நான் இருந்தப்போ அடிக்கடி பேசியிருக்கேன். அந்த அறிமுகத்துல சுஜாதாவை நேர்ல சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். ஃபோன் பண்ணேன். பேர் சொன்னேன்.

சுஜாதா ரொம்ப ரசனையான ஆசாமி!(அவர் ஸ்டைல்!) அற்பமானது..நுட்பமானதுனு பேதமில்லாம கவனிச்சு ரசிப்பார். ‘‘எம்.பி உதயசூரியனா! பேர் நல்லாருக்கே! காலைல பீச்சுக்கு வர்றீங்களா..ஈவ்னிங் வீட்டுக்கு வர்றீங்களா?’’னு மெல்லிசான குரல்ல கேட்டார். ‘‘பீச்சுக்கு வர்றேன் சார்’’னேன். அன்னிக்கு ராத்திரி என் தூக்கத்தை கெடுத்தது வேறெந்த கவர்ச்சிக்கன்னியும் கெடயாது..சத்தியமா சுஜாதாதான்!

பொழுது விடிஞ்சது. ‘காந்தி’ காத்து வாங்கற கடற்கரை. காத்திருந்தேன். ‘தேவன் வந்தார்’. இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கறவங்க விஷ் பண்ணிகிட்டே கடக்க..மையமா சிரிச்சுகிட்டே சுஜாதா ‘பைய்ய’ நடந்தாரு. பக்கத்துல போய் ‘‘வணக்கம் சார்’’னேன். ஒருநொடி என்னை உன்னிப்பா ‘ஸ்கேன்’ பண்ணிட்டு ‘‘வாங்க உதயசூரியன்’’னு அசால்ட்டா சொல்ல..என் நடுமுதுகு ‘திடுக்‘னுச்சு.

அதுக்கு முன்ன சுஜாதா என்னை முன்ன பின்ன (‘சிவாஜி’ பட காமெடியை யோசிச்சுராதீங்க!) பாத்ததில்ல! ‘‘அப்புறம் எப்டி சார் கண்டுபிடிச்சீங்க?’’ன்னு ஆச்சரியப்பட்டேன். அலட்டிக்காம சுஜாதா சொன்னாரு..‘‘பீச்ல என்னை பெரும்பாலும் பாக்கறவங்க ‘நீங்க சுஜாதாதானே‘ன்னு கேப்பாங்க. சிறும்பாலும் பாக்கறவங்க ‘யாரோ ஒரு மியூசியம் ஆசாமி’ன்னு திகிலா விலகிப்போவாங்க. இதுல ‘வணக்கம் சார்‘னு வந்தா அது நீங்களாத்தான் இருக்கணும்னு ஒரு குன்ஸா அடிச்சேன்’’னார் பாருங்க..அதான் சுஜாதா!

எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும். அன்னிக்கு செமஜாலி மூடுல இருந்தார். டேபிள்ல ‘மகாமகா தடிமனா’ ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘‘என்ன சார் இந்த புக் கல்லாப்பெட்டி சைஸ்ல இருக்கே’’னு கேட்டேன்.

அடுத்த நொடி..‘பம்பர் ப்ரைஸ் விழுந்த மாதிரி சர்ப்ரைஸ்’ ஆனேன். ஆமாங்க. அந்த கமெண்ட்டுக்கு ஒரு குழந்தையைப்போல வஞ்சனையில்லாம சிரிச்சார் சுஜாதா. எனக்கோ பெருமை தாங்கல! அதேஜோர்ல ‘‘சார்..இதை முழுசா படிச்சிட்டீங்களா?’’ன்னேன்.‘‘இப்பத்தான் பத்து பக்கம் முடிச்சிருக்கேன்’’னார். உடனே நான் ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரே வார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்!

‘‘இந்த கட்டுரைத்தொடரை ‘ஏன்..எதற்கு..எப்படி’மாதிரி கேள்வி பதிலா கொண்டுபோலாமா சார்?’’னேன். ‘‘வேணாம் வேணாம்! ‘ என்னை ஒரு ‘சர்வரோக நிவாரணியா‘ நினைச்சு ‘சொப்பன ஸ்கலிதம்.. விரை வீக்கம்..ஆண்மைக்குறைவு தீர என்ன வழி‘னு கேட்டே திணறடிச்சிருவாங்க! அப்புறம் அத்தனையும் எனக்கு வந்துரும்..கேள்விகளா!’’னு ‘நச்‘னு சொல்ல..சேர்ந்து சிரிச்சோம்.

‘சொர்க்கவாசல்’ திறக்கற ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிச்சாலும்..
‘சொர்க்கம் நரகம்ங்கிறதெல்லாம் உட்டாலக்கடி’னு சொல்றவரு இந்த ரங்கராஜன். ‘‘இறந்த பிறகு சொர்க்கத்துக்கு போகணுமா..நரகத்துக்கு போகணுமானு கேட்டா..நரகத்துக்கு டிக்கெட் வாங்கத்தான் எனக்கு விருப்பம்! ஏன்னா..சொர்க்கம் போரடிக்கும். படுசுவாரஸ்யமான மனிதர்கள்லாம் நரகத்துலதான் இருப்பாங்க!’’னு ஜாலியா சொன்னவரு சுஜாதா!

எதுக்கும்..வரப்போற ‘தீபாவளி ஸ்பெஷல்’ பத்திரிகைகளை வாங்கி
ஆற அமரப் படிங்க! ‘சொர்க்கம் நரகம்’னுகூட வினோதமான கட்டுரை எழுதியிருப்பார் அமரர் சுஜாதா!

(நன்றி: ‘சாக்லெட் சந்திப்புகள்’- நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு)

No comments:

Post a Comment